ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 17 Oct 2021 2:02 AM IST (Updated: 17 Oct 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம்:

சிறப்பு வழிபாடு
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இந்நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று கோவிலில் காலை முதலே சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
மூலவர் ரெங்கநாதர் சன்னதியில் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை மூலஸ்தான சேவை நடைபெற்றது. தாயார் சன்னதியில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை மூலஸ்தான சேவை நடைபெற்றது. சக்கரத்தாழ்வார் சன்னதியில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை, மதியம் 2.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை மூலஸ்தான சேவை நடைபெற்றது.
நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
நேற்று கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமிநரசிம்மரை தரிசனம் செய்தனர்.

Next Story