நாமக்கல்லில், முதன் முறையாக ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி


நாமக்கல்லில், முதன் முறையாக ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 21 Oct 2021 9:53 PM IST (Updated: 21 Oct 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில், முதன் முறையாக ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி

நாமக்கல்:
நாமக்கல்லில் நேற்று முதன் முறையாக டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது. இதனால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விலை உயர்வு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு நிகராக, மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்திலும், நவராத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற விடுமுறை நாட்களிலும் தவறாமல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
இதனால் லாரி, பஸ், கார் உரிமையாளர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி டீசல் விலை உயர்வால் லாரிகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய முடியாமல் சரக்கு போக்குவரத்து தொழில் மிகவும் நெருக்கடியில் உள்ளது.
டீசல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் ஒரு லிட்டர் 99 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் 100 ரூபாய் 23 காசுகளுக்கு விற்பனையானது. முதல் முறையாக நாமக்கல் நகரில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.100-ஐ கடந்து இருப்பதால் லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் நகரில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 104 ரூபாய் 24 காசுகளுக்கும், பிரிமியம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 107 ரூபாய் 79 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டன.
செவி சாய்க்கவில்லை
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:-
சுங்கச்சாவடி கட்டணம், இன்சூரன்ஸ் பிரிமிய கட்டணம் உயர்வால் லாரி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது டீசல் விலை சதத்தை தாண்டி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 ரூபாய் 33 காசுகள் உயர்ந்து உள்ளது. டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் விடுக்கும் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. பொதுமக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே அரசு டீசல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story