தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Oct 2021 7:48 PM IST (Updated: 23 Oct 2021 7:48 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேறும், சகதியுமான சாலை

நெல்லை ராமையன்பட்டி சசிநகரில் பல ஆண்டுகளாக முறையாக சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் தற்போது பெய்த மழையால் இந்த பகுதி சேறும், சகதியாக காணப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சோமசுந்தரம், ராமையன்பட்டி.

ரெயில் நிலையத்திற்கு பஸ் இயக்கப்படுமா?

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் மட்டும் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிக்கு வந்து செல்கிறது. மேலும் தனியார் கண் ஆஸ்பத்திரி பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு மற்ற பஸ்கள் பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் நெல்லை ரெயில் நிலையத்திற்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. பாபநாசம், அம்ைப, தென்காசி, சேரன்மாதேவி, ஆலங்குளம் போன்ற ஊர்களில் இருந்து வரும் பயணிகள் தற்காலிக பஸ் நிறுத்த பகுதியில் இறங்கி ரெயில் நிலையத்திற்கு மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது. இதேபோல் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து பயணிகளின் நிலைமையும் உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி ஒரு சில டவுன் பஸ்களை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வரை இயக்கினால் வசதியாக இருக்கும்.

சண்முகசுப்பிரமணியன், கோடீஸ்வரன் நகர்.

மழைநீரால் நோய் பரவும் அபாயம் 

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 9 எடுப்பூர் காமராஜர் தெருவில் முறையான சாலை வசதிகள், மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைகாலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

செல்லத்துரை, எடுப்பூர்.

குண்டும், குழியுமான சாலை

நெல்லை டவுன் வழுக்கோடையில் இருந்து ஆர்ச் வரை உள்ள சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. தினமும் இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றது. இந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மழை பெய்தால் இந்த சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமாக காட்சி அளிக்கும். தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் இந்த சாலையை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சம்பத்குமார், தியாகராஜநகர். 

தெரு நடுவில் மின்கம்பம் 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியாபுரம் 6, 7-ம் தெருக்களில் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பங்களை ெதருவோரமாக மாற்றி வைத்தால் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருக்கும்.

சம்சுதீன், தென்காசி.

மின்விளக்கு எரியவில்லை

தென்காசி ஸ்டேட் வங்கி 6-வது தெருவில் ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள 4 மின்விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மாரியப்பன், தென்காசி.

அரசு பஸ் இயக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரியதாழை, புத்தன்தருவை, அதிசயபுரம், பனைவிளை, கலியன்விளை, தச்சன்விளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக அருகில் உள்ள திசையன்விளைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் ஊரில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு செல்ல அரசு பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். ஆதலால் மாணவர்களின் நலன் கருதி அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாரியப்பன், அரசூர்.



Next Story