கனமழை எதிரொலி 3 நாட்களில் 7 அடி உயர்ந்த மருதாநதி அணை விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் மருதாநதி அணை 3 நாட்களில் 7 அடி உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக மருதாநதி அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 7 அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரமான 72 அடியில் தற்போது 63.3 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசன வசதிக்காக வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், மருதாநதி அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story