தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Oct 2021 3:54 PM GMT (Updated: 25 Oct 2021 3:54 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிறுவர் பூங்கா பகுதியில் பள்ளம் 

நெல்லை பாளையங்கோட்டையில் வ.உ.சி. சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சிறுவர்கள் விளையாடி செல்கிறார்கள். இந்த பூங்கா அருகில் உள்ள நடைமேடை ஆங்காங்கே உடைந்து பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்பவர்கள் அதில் விழும் நிலை ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் ஆங்காங்கே உடைந்து காணப்படும் நடைமேடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கைலாசபாண்டி, கைலாசபுரம்.

மோசமான சாலை 

பத்தமடை மலுக்காமலியார் பள்ளிவாசல் செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. கனரக வாகனங்கள் பொருட்களை ஏற்றிச் செல்லும்போது, அங்குள்ள கழிவுநீர் ஓடையில் இறங்கி பதிந்துவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
முகைதீன், பத்தமடை.

கால்நடை ஆஸ்பத்திரி வேண்டும்

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து பகுதியில் ஏராளமானவர்கள் கால்நடை வளர்த்து வருகிறார்கள். இந்த கால்நடைகளுக்கு ஏதேனும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சைக்காக அருகில் உள்ள ராதாபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் விஜயாபதியில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சாலையில் தேங்கும் கழிவுநீர் 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அம்பாநகர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கழிவுநீரை கடந்து செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே வாறுகாலை சுத்தம் செய்து சுகாதார கேட்டை நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அம்ஜத், முதலியார்பட்டி.

மின்விளக்கு எரியுமா?

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து அம்பாநகர் வரை சாலையில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். உடனடியாக இந்த பகுதியில் உள்ள மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்குமரன், கடையம்.

கடற்கரையில் குவியும் குப்பைகள் 

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு அரசுக்கு சொந்தமான உரக்கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் குப்பைகளை அங்கு கொட்டாமல் கடற்கரை ஓரமாக கொட்டுகிறார்கள். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. பலத்த காற்று வீசும்போது குப்பைகள் கடலில் கலப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.
மைக்கேல், தருவைகுளம்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் 

திருச்செந்தூர் பஸ் நிலையம், தூண்டுகை விநாயகர் கோவில் பகுதி, பந்தல் மண்டபம், சன்னதி தெரு, ரதவீதி ஆகிய பகுதிகளில் மாடுகள் பகல் நேரங்களில் சுற்றித்திரிகின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். மேலும் ஒரு சிலரை மாடுகள் முட்டி காயத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே திருச்செந்தூர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மோகனகிருஷ்ணன், திருச்செந்தூர்.

Next Story