கொடைக்கானல் அருகே கயிறு கட்டி ஆற்றை கடக்கும் விவசாயிகள்


கொடைக்கானல் அருகே கயிறு கட்டி ஆற்றை கடக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Oct 2021 10:09 PM IST (Updated: 25 Oct 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே கயிறு கட்டி விவசாயிகள் ஆற்றை கடந்து வருகின்றனர்.

கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஓட்டி பேத்துப்பாறை பெரியாறு செல்கிறது. இந்த ஆற்றின் ஒரு கரையில் கிராமமும், மறுகரையில் வயல்வெளிகளும் உள்ளன. பேத்துப்பாறையை சேர்ந்த விவசாயிகள் இங்கு கேரட், முள்ளங்கி, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். 
இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள ஆறு, ஓடை உள்ளிட்டவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் பேத்துப்பாறை பெரியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, டைகர் சோலை அருவிகள், வில்பட்டி ஆறு உள்ளிட்டவற்றில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பேத்துப்பாறை கிராமத்திற்கும், அங்குள்ள வயல்வெளிக்கும் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கயிறு கட்டி ஆற்றை கடந்து வயல்வெளிக்கு சென்று வருகின்றனர். 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பருவமழை காலங்களில் பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் வயல்வெளிக்கு செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக வயலில் விளைந்த காய்கறிகளை மறுக‌ரைக்கு கொண்டு வரமுடியாமல் தவித்து வருகிறோம். சில நேரங்களில் தலைசுமையாகவே காய்கறி மூட்டைகளை தூக்கிக்கொண்டு இக்கரைக்கு வ‌ருவ‌த‌ற்கு கயிறு கட்டி, ஆபத்தான முறையில் கடந்து வருகிறோம். எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பேத்துப்பாறை பெரியாற்றில் தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story