கத்திமுனையில் காவலாளியை மிரட்டி 2 வீடுகளில் ரூ 3 லட்சம் நகைகள் கொள்ளை

கச்சிராயப்பாளையம் அருகே துணிகரம் கத்திமுனையில் காவலாளியை மிரட்டி 2 வீடுகளில் ரூ 3 லட்சம் நகைகள் கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பாதரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமலை மகன்கள் சுந்தரம்(வயது 58), முரளிகிருஷ்ணன்(56). விவசாயம் செய்து வரும் இவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுந்தரம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
அதேபோல் முரளிகிருஷ்ணனும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சுந்தரத்தின் வீட்டில் வேலை செய்து வரும் ராஜமாணிக்கம் என்பவர் இரவில் 2 வீடுகளையும் காவல் காத்து வந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 5-க்கும் மேற்பட்டோர் வீட்டின் கதவை உடைத்தனர்.
இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள கொட்டகையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ராஜமாணிக்கம் திடுக்கிட்டு எழுந்து வந்தார். அப்போது முகமூடி கொள்ளையர்கள் சுந்தரம் வீட்டின் கதவுகளை உடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் எழுப்பினார். உடனே முகமூடி கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து ராஜமாணிக்கத்தின் கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்து போன அவர் கூச்சல் போடுவதை நிறுத்தினார்.
பின்னர் சுந்தரம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து முரளிகிருஷ்ணன் வீட்டின் உள்ளே புகுந்து அங்கு பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிபொருட்களையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து ராஜமாணிக்கம், சுந்தரம் மற்றும் முரளிகிருஷ்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் இருவரும் குடும்பத்துடன் விரைந்து வந்து வீட்டை பார்த்தனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புவனேஸ்வரி மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையிலான கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவுசெய்தனர்.
அதேபோல் மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை சுற்றி வந்து பின்னர் அங்கிருந்து ஓடி கடத்தூர் சாலையில் போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். முகமூடி கொள்ளையர்கள் காவலாளியை கத்திமுனையில் மிரட்டி 2 வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story