புட்லூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

புட்லூர் ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளுரை அடுத்த புட்லூர் ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர்.
பின்னர் திருவள்ளுரில் புதியதாக கட்டப்பட்டு வரும் திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரியின் அனைத்து பகுதிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த தேசிய மருத்துவ ஆய்வுக்குழு விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் தலா 150 வீதம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது.
ஆனால் நாமக்கல், திருப்பத்தூர், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறிய அளவிலான பணிகள் நடைபெறாமல் இருந்ததால் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு பதிலாக 100 என்ற வகையில் ஒப்புதல் அளித்தார்கள். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதல் கட்டுமானப்பணிகள் நடைபெற வேண்டியது இருந்ததால் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது திருவள்ளூர் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளின் பணிகளும் நிறைவடைந்து விட்டது. இதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே நாமக்கல், திருப்பத்தூர், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மருத்துவ கல்லூரிகளுக்கு மீதமுள்ள 50 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு 150 வீதம் 600 மாணவர் சேர்க்கையும் என ஆக மொத்தம் 800 மாணவர் சேர்க்கைகள் இந்த ஆண்டிலேயே நடைபெறும் என எதிர்ப்பார்க்கிறோம்.
புட்லூர் ஊராட்சியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்துக்கு பதிலாக அதே இடத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story