விக்கிரமசிங்கபுரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம்- நகை கொள்ளை


விக்கிரமசிங்கபுரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம்- நகை கொள்ளை
x
தினத்தந்தி 28 Oct 2021 1:59 AM IST (Updated: 28 Oct 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார்.

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார்.

ஓய்வுபெற்ற மில் தொழிலாளி

விக்கிரமசிங்கபுரம் அருேக அகஸ்தியர்பட்டி நக்கீரர் தெருவை சேர்ந்தவர் உலகராஜ் (வயது 65). ஓய்வுபெற்ற மில் தொழிலாளியான இவர் தற்போது எல்.ஐ.சி. ஏஜெண்டாக உள்ளார். இவருடைய மனைவி காமாட்சி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு விருதுநகருக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் நேற்று அதிகாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 ஆயிரத்து 300 ரூபாயை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மற்றொரு வீட்டிலும் கொள்ளை

இதேபோல் உலகராஜ் வீட்டின் அருகே வசித்து வருபவர் பேச்சிமுத்து. அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் ராஜபாளையத்தில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 1 ஜோடி தங்க கம்மல், 2 தங்கக்காசுகளை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது. 2 வீடுகளிலும் கொள்ளையடித்தது ஒரே நபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் அடுத்த தெருவான வியாசர் தெருவில் 2 வீடுகளில் இதேபோன்று பூட்டை உடைத்து கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.

Next Story