ராதாபுரம் அரசு ஐ.டி.ஐ.யில் புதிதாக 4 பாடப்பிரிவுகள்- அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்


ராதாபுரம் அரசு ஐ.டி.ஐ.யில் புதிதாக 4 பாடப்பிரிவுகள்- அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2021 9:53 PM IST (Updated: 28 Oct 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

வரும் கல்வியாண்டில் ராதாபுரம் அரசு ஐ.டி.ஐ.யில் புதிதாக 4 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.) உள்ளது. இங்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார். தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும், கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்பு அங்குள்ள பேட்டரியில் இயங்கும் காரை அமைச்சர்  சி.வி.கணேசன் ஓட்டினார். அவருடன் சபாநாயகர் அப்பாவு, ஞானதிரவியம் எம்.பி. ஆகியோரும் அதில் ஏறி பயணம் செய்தனர். 

பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராதாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு மெயின்ரோட்டில் இருந்து தார்சாலை அமைக்கவும், இருபுறமும் மின்விளக்குகள் மற்றும் சுற்றுப்புற சுவர் அமைக்கும் பணிகளும் இன்னும் 2 மாதத்திற்குள்  நிறைவேற்றப்படும்.  இங்கு தற்போது 206 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். வரும் கல்வி ஆண்டு முதல் புதிதாக 4 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு, கூடுதலாக 280 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தொழிற்பயிற்சி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் கூடுதலாக 25 ஆயிரம் மாணவர்களை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் விஷ்ணு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இயக்குனர் வீரராகவராவ்,  ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன், பயிற்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) லட்சுமணன் உள்பட பலர் உடன் சென்றனர். இதேபோல் நெல்லை பேட்டையில் அமைந்துள்ள அரசு ஐ.டி.ஐ.யிலும் அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.


Next Story