8-ம் வகுப்பு வரை 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள்: சேலத்தில் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்


8-ம் வகுப்பு வரை 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள்: சேலத்தில் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 29 Oct 2021 3:04 AM IST (Updated: 29 Oct 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

1 முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சேலத்தில் பள்ளிக்கூடங்களில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சேலம்:
1 முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சேலத்தில் பள்ளிக்கூடங்களில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நேரடி வகுப்புகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. சமீபத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம், கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் கடைபிடிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூய்மை செய்யும் பணிகள்
அதன்படி, சேலம் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற 1-ந் தேதி முதல் நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
மாணவர்கள் அமரும் பெஞ்ச், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் தூய்மை செய்யும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விண்ணப்பம்
பள்ளிகள் திறந்தவுடன் தனிமனித இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்து பாடம் கற்பிக்க வேண்டும், முககவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், உடல் வெப்ப நிலையை பரிசோதித்தல் ஆகியவற்றில் ஆசிரிய, ஆசிரியைகள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுக்கு பிறகு அனைத்து வகுப்புகளும் தொடங்க உள்ளதால் ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தங்களது மகன் அல்லது மகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதமா? என்பது குறித்து பெற்றோர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் இருந்து விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதை பெற்றோர்கள் பூர்த்தி செய்து பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கி வருகிறார்கள்.

Next Story