தையல் நூல் விலை 15 சதவீதம் உயர்வு

தையல் நூல் விலை 15 சதவீதம் உயர்வு
திருப்பூர்
மூலப்பொருட்களின் விலை உயர்வால் தையல் நூல் விலை 15 சதவீதம் உயர்த்தி, தையல் நூல் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தையல் நூல் விலை 15 சதவீதம் உயர்வு
தையல் நூல் வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவம் மற்றும் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
பாலியஸ்டர் தையல் நூல் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை வாரந்தோறும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சந்தைகளில் தேவைகள் அதிகரிப்பு காரணமாக விலை கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த விலை உயர்வின் காரணமாக தையல் நூல் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பாதிப்பையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகிறார்கள்.
இதனால் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 18ந் தேதி முதல் அனைத்து தையல் நூல்களின் விலையையும் 15 சதவீதம் உயர்த்தியுள்ளோம். இந்த விலை உயர்வுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் எப்போதும் தருகின்ற ஆதரவை தர வேண்டும்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
தையல் நூல் உற்பத்தி மற்றும் வர்த்தக துறையில் ஏற்பட்டுள்ள இந்த மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் தையல் நூல்கள் வைண்டிங் பணிகளுக்கு தேவையான பிளாஸ்டிக் கோன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதிக விலை கொடுத்து புதிதாக வாங்க வேண்டியுள்ளது. இந்த பிளாஸ்டிக் கோன்களை 10 முறைக்கும் மேலாக பயன்படுத்துவோம். ஆனால் பிளாஸ்டிக் கோன் தயாரிப்பாளர்கள் ஒரு முறை பயன்படுத்தியதும், அவற்றை மீண்டும் வந்து விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். இதனால் நாங்கள் மீண்டும் புதிய கோன்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. தையல் நூல்களை சாயமேற்ற செய்ய ஆகும் செலவும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சாய ஆலைகளில் எரிபொருளாக பயன்படுத்தும் விறகு மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சாய கட்டணமும் அதிகரித்துள்ளது. இதனாலும் எங்களுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன கட்டணம் மற்றும் போக்குவரத்து பணிகளுக்கான செலவும் அதிகரிப்பு, சாயம் மற்றும் கெமிக்கல் விலை உயர்வு, மிக முக்கியமாக சிலிக்கான் ஆயில் விலையேற்றம் போன்றவற்றால் உற்பத்தி செலவும் அதிகரித்தே வருகிறது. இதனால் விலையை உயர்த்தியுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் ஆடை உற்பத்திக்கு மிகவும் முக்கியமான பாலியஸ்டர் தையல் நூல்களின் உற்பத்திக்கு உதவும் வகையில் இந்த தொழிலை கூர்ந்து கவனித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
----------
Related Tags :
Next Story