உழவர்சந்தைக்கு நேரடி பஸ் போக்குவரத்து வசதி வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

உழவர்சந்தைக்கு நேரடி பஸ் போக்குவரத்து வசதி வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
கரூர்,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 190 மனுக்கள் வரப்பெற்றன. அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
வெங்கமேடு (சின்னக்குளத்துப்பாளையம்) உழவர் சந்தை விவசாயிகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
பஸ் போக்குவரத்து
வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையில் பணிபுரியும் வெங்கமேடு உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர்களின் ஆலோசனைப்படி தற்போது கரூர், வெங்கமேடு (சின்னக்குளத்துப்பாளையம்) உழவர் சந்தைக்கு தினமும் மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, வீரியம்பாளையம், சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள், கீரைகள் மற்றும் வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ வாழைப்பழம் ஆகியவற்றை எடுத்து சென்று வெங்கமேடு உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறோம்.
உழவர் சந்தைக்கு காய்கறிகளை நேரடியாக கொண்டு செல்ல பஸ் வசதி இல்லாத காரணத்தினால் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ மற்றும் இதர வாகனங்களில் எடுத்து செல்வதால் எங்களுக்கு காலதாமதம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது. எங்களின் நலன்கருதி அதிகாலை 5.30 மணிக்கு புனவாசிப்பட்டியில் இருந்து புறப்படும் நகர பஸ்சை 1 மணி நேரம் முன்னதாக 4.30 மணிக்கு புறப்பட்டு மகிளிப்பட்டி வழியாக வெங்கமேடு உழவர் சந்தை வரை இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தார்சாலை
காந்திகிராமம், தெற்கு, 3-வது தெரு, கிருஷ்ணாநகர் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இதுவரை தார்ச்சாலை என்பதே கிடையாது. 8 மாதங்களுக்கு முன் சாலை அமைக்க 2 பக்கம் உடைத்து நேராக இருந்த சாலையை குண்டும், குழியுமாக ஆக்கி, தற்போது நடக்கவே முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனிடையே சாக்கடையும் உடைந்து, கழிவு நீரும் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மிகவும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளோம். ஆகையால் போர்க்கால அடிப்படையில் சாக்கடை சீரமைப்பு மற்றும் தார்சாலை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூசாரிகள் நலச்சங்கம்
பூசாரிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- பூசாரிகள் நலவாரிய உறுப்பினராக பல ஆயிரம் பேர் இருந்தும் அவர்களின் நலவாரிய அட்டையின் பதவி காலம் முடிந்தும் இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நலவாரிய அட்டையை புதுப்பிக்காமலும் மற்றும் எந்தவொரு நலவாரிய திட்டங்களின் அடிப்படையிலும் பூசாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமலும் உள்ளது. புதிய நலவாரிய உறுப்பினர் அட்டை 2017-ல் இருந்து இன்று வரை எந்தவொரு அல்லது ஒரு உறுப்பினர் அட்டையும் கூட கொடுக்கவில்லை. ஆனால் நலவாரியம் நடைமுறையில் உள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கூறுகிறார்கள் ஆதலால் பல கிராம கோவில் பூசாரிகளுக்கு வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வடிகால் வசதி
தாந்தோன்றிமலை, இந்திராகாந்தி நகர் நாகராஜன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களது நகரில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் சாக்கடை, வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே எங்களுக்கு சாக்கடை வசதி மற்றும் சாலை வசதி செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story