நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு-ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 20 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 82.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 70 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாகவும் இருக்கும்.
கால்நடைகள்
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் பருவமழை காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், மழைநீர் தேங்குவதாலும், கால்நடைகளில் அக ஒட்டுண்ணிகள், ஈக்கள் மற்றும் கொசுக்களின் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவற்றிடம் இருந்து பாதுகாத்து கொள்ள மாலை பொழுது மற்றும் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ள குளம், குட்டை பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளின் தொழுவத்தை சுற்றிலும் மழைநீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
தொழுவத்தின் உள்ளே மாலை பொழுதில் ஈக்கள் மற்றும் கொசுக்களை விரட்ட புகைமூட்டம் அல்லது பூச்சி கொல்லி கலந்த ரசாயனங்களை பயன்படுத்தலாம். பருவமழை காலங்களில் இவ்வாறு செய்வதன் மூலம் கால்நடைகளில் ஈக்கள் மற்றும் கொசுக்களின் மூலமாக பரவும் ஒட்டுண்ணி மற்றும் நச்சுயிரி நோய்களின் தாக்கத்தினை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story