கொட்டும் மழையிலும் நாட்டுக்கோழி விற்பனை அமோகம்


கொட்டும் மழையிலும் நாட்டுக்கோழி விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 3 Nov 2021 1:33 AM IST (Updated: 3 Nov 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சிற்றம்பலம் கடைவீதியில் கொட்டும் மழையிலும் நாட்டுக்கோழி விற்பனை அமோகமாக நடந்தது.

திருச்சிற்றம்பலம்:
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சிற்றம்பலம் கடைவீதியில் கொட்டும் மழையிலும் நாட்டுக்கோழி விற்பனை அமோகமாக நடந்தது.
தொடர்மழை
கடந்த பல நாட்களாக பருவமழை தொடர்ந்து கனமழையாக பெய்து வருகிறது. இதனால் தீபாவளி திருநாளை பொதுமக்கள் உற்சாகமின்றி வரவேற்கும் மன நிலையில் உள்ளனர். குறிப்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு பிரத்யேகமாக நடைபெறும் வியாபாரங்கள் அனைத்தும் மழையினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. 
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு அதிக அளவிலான வியாபாரம் இந்தாண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட அளவு வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 
உற்சாகமின்றி வரும் தீபாவளி
அதே நேரத்தில் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை இன்றி விவசாய பணிகள் அனைத்தும் துரிதகதியில் நடந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் இயற்கை ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பண்டிகை நாட்களில் தீபாவளி திருநாளுக்கு என முக்கிய இடம் உண்டு. புத்தாடை அணிந்து, பட்டாசு கொளுத்தி இனிப்புகளுடன் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவராலும் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் இந்த ஆண்டு தொடர் மழையின் காரணமாக வழக்கமான உற்சாகமின்றி காணப்படுகிறது. 
நாட்டுக் கோழி விற்பனை அமோகம்
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நாட்டுக்கோழி விற்பனை நேற்று காலை அமோகமாக நடந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் உற்சாகமாக நாட்டுக்கோழிகளை வாங்கி சென்றனர். 
வழக்கமான விலையைவிட சற்றே விலை அதிகம் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது நாட்டுக்கோழிகள் வாங்கிச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அதனால் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Next Story