ஷட்டர்கள் வழியாக உபரி நீர் திறப்பு

மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் 3 ஷட்டர்கள்வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தளி
மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் 3 ஷட்டர்கள்வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையும் வேகமாக நிரம்புகிறது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மூலம் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அதன்படி அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கடந்த நில நாட்களாக வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்ததுடன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. இதையடுத்து அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொறுத்து கடந்த 3 நாட்களாக மதகுகள் வழியாக உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
உபரி நீர் திறப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 300 கனஅடி வரையில் நீர்வந்தது. உடனே
அணையின் பாதுகாப்பு கருதி 9 கண்மதகுகளில் மூன்று மதகுகள், பிரதான கால்வாய், சட்டர்கள் மூலமாக 4 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.அணைக்கு வந்து கொண்டு இருந்த நீர்வரத்து காலை 8 மணி அளவில் படிப்படியாக குறைந்தது. ஆனாலும் மூன்று மதகுகள் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்ட செய்தி சுற்றுப்புற கிராமங்களில் பரவியது.அதை தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மதகுகளுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் உறவினர்களுக்கு அனுப்பியும் மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.
கண்காணிப்பு
மேலும் வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. இதை தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தை உதவிப் பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.அத்துடன் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் 9 கண் மதகுகள், ஷட்டர்கள், பிரதான கால்வாய் வழியாக கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.80 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 2449 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2,234 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் 13 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
திருமூர்த்தி அணை
பாலாற்றில் கட்டப்பட்டுள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன பாலாறு, உழுவிஆறு, கொட்டையாறு, பாரப்பட்டிஆறு, குருமலைஆறு, வண்டியாறு, உப்புமண்ணம்ஓடை, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள் நீராதாரமாக உள்ளது. அது தவிர அணையின் நீராதாரமாக அப்பநீராரு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் விளங்கிவருகிறது. இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. .அணைக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்து மற்றும் நீர் இருப்பின் பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கினர் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
அணையின் நீராதமான பாலாறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் 2-ம் முறையாக பாலாற்றில் அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அணைக்கு காண்டூர் கால்வாய் மற்றும் பாலாறு மூலமாக வினாடிக்கு 1,347 கன அடி அளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தாலும் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து 53 அடியை கடந்து உள்ளது.அணைக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.மேலும் நீர்வரத்து அதிகரித்து அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கினால் அணையின் பாதுகாப்பு கருதி அங்குள்ள ஷட்டர்கள் வழியாக பாலாற்றில் உபரிநீர் திறப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 53.88 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 1,347 தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 988 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அணைப்பகுதியில் 16 மில்லி மீட்டரும், நல்லாறு பகுதியில் 78 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
---
-
Related Tags :
Next Story