மரக்காணம் அருகே மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு

மரக்காணம் அருகே மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் இறந்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் மரக்காணம் அருகே நல்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 53) என்பவர் நேற்று முன்தினம் மாலை தனது கூரை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
பெண் சாவு
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட முத்துலட்சுமி அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக சிறுவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே வரும் வழியிலேயே முத்துலட்சுமி இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்த தகவலின்பேரில் மரக்காணம் தாசில்தார் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், இடிந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story