நீரில் மூழ்கி 1,500 ஏக்கர் நெற்பயிர் சேதம்


நீரில் மூழ்கி 1,500 ஏக்கர் நெற்பயிர் சேதம்
x
தினத்தந்தி 7 Nov 2021 11:49 PM IST (Updated: 7 Nov 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே பலத்த மழையால் கண்மாய் நிரம்பி வழிந்ததால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே பலத்த மழையால் கண்மாய் நிரம்பி வழிந்ததால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

தொடர் மழை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் பகுதியை ஒட்டிய செய்களத்தூர் பெரிய கண்மாய் மற்றும் சின்ன கண்மாய், எஸ்.நெடுங்குளம், குருந்தன்குளம், சந்திரனேந்தல் மற்றும் புளிச்சிகுளம் ஆகிய கண்மாய்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரிவர தூர்வாரப்படவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் 1,500 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தனர். அந்த நெற்பயிர் நன்கு வளர்ந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மானாமதுரை பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தூர்வாரப்படாததால் செய்களத்தூர் கண்மாய் நிரம்பி வழிந்தது. அந்த கண்மாய் தண்ணீர் சாலைகளை கடந்து வயல்வெளியில் புகுந்தன. இதனால் வயலில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 1,500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின. இதை பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்தனர். தங்கள் வயலில் இறங்கி நீரில் மூழ்கிய நெற்பயிரை கைகளில் ஏந்தி கண்ணீர் வடித்தனர். விவசாயிகளின் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது.

தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது

மானாமதுரையில் இருந்து செய்களத்தூர் செல்லும் ரோட்டில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்காக மாற்றுப்பாதை பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது பெய்த மழையால் காட்டாற்று வெள்ளத்தால் அந்த தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது. பாலம் உடைந்ததால் சேறும், சகதியுமாக காணப்படும் அந்த தற்காலிக மண்பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். தொடர் மழை காரணமாக நெடுங்குளத்தில் வீடுகளும் இடிந்து விழுந்தன.

தாசில்தார் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மானாமதுரை தாசில்தார் தமிழரசன், மானாமதுரை யூனியன் சேர்மன் லதா அண்ணாத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, மலைச்சாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், செய்களத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என்றும் குடிமராமத்து திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பல முறை கோரிக்கை விடுத்தும் சேர்க்கப்படவில்லை. இதனால் தற்போது பெய்த மழைநீர் வீணாகி சென்று கொண்டிருக்கிறது. மேலும் ரோடுகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் செய்களத்துர் பகுதி தனி தீவாக மாறியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story