பாளையங்கோட்டை பஸ்நிலைய வியாபாரிகள் முற்றுகை


பாளையங்கோட்டை பஸ்நிலைய வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Nov 2021 12:46 AM IST (Updated: 9 Nov 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை, பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை, பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முற்றுகை போராட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். பெரும்பாலானோர் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் வேலை கேட்டு மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை பஸ்நிலைய வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தினருடன் சங்க மாநகர தலைவர் சாலமோன், தலைவர் அசோகன், செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் சேக்முகமது ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா, சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

முன்னுரிமை அளிக்க வேண்டும்

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை பஸ் நிலைய பகுதியில் குத்தகை அடிப்படையில் கடை நடத்தி வந்தோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகளை புனரமைப்பு செய்வதாக கூறி எங்களை காலி செய்ய வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து கடைகளை காலி செய்தோம். அங்கு கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் ஏற்கனவே வணிகம் செய்த அனைத்து வணிகர்களுக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

புதிய கடைகளுக்கு நாளை (புதன்கிழமை) ஏலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அங்குள்ள கடைகளுக்கான வாடகை சதுர அடிக்கு ரூ.15-ல் இருந்து 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் முன்பணமாக முன்பு 12 மாத வாடகை வாங்கி இருந்த நிலையில் தற்போது ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை முன்பணம் கேட்டுள்ளனர். இதனால் நாங்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பஸ் நிலையத்தில் ஏற்கனவே கடை நடத்திய பழைய வியாபாரிகளுக்கு மீண்டும் அங்கு கடைகள் ஒதுக்கித் தரவேண்டும். புதிய வணிக வளாகத்தில் கட்டப்படும் கடைகளில் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வார்டு மறுவரையறை

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல பகுதியில் மக்கள் தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
சங்கர்நகர் ம.தி.மு.க. செயலாளர் முருகன் கொடுத்த மனுவில், “சங்கர்நகர் பேரூராட்சிக்கு நிரந்தரமாக செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். பண்டாரகுளம் சமுதாய கூடத்தை புதுப்பிக்க வேண்டும். பண்டாரகுளம் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story