தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் உடலில் இருந்த 6 கிலோ கட்டி ஆபரேசன் மூலம் அகற்றம்


தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் உடலில் இருந்த 6 கிலோ கட்டி ஆபரேசன் மூலம் அகற்றம்
x
தினத்தந்தி 9 Nov 2021 7:21 PM IST (Updated: 9 Nov 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் உடலில் இருந்த 6 கிலோ கட்டி ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது.

ஆண்டிப்பட்டி:
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பரமன் மனைவி முத்து (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டி உருவானது. ஆரம்பத்தில் சிறிய அளவில் உருவான கட்டி படிப்படியாக வளர்ந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி கட்டியில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவர்  சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் மார்பக கட்டியை ஆபரேசன் மூலம் அகற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அறுவை சிகிச்சை டாக்டர்கள் செலின் பவுஸ்டினா மேரி, கங்கா, கார்த்திகேயன், வைத்தீஸ்வரன், மயக்கவியல் டாக்டர்கள் கண்ணன், போஜராஜ் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் முத்துவின் மார்பில் இருந்த சுமார் 6 கிலோ எடையுள்ள கட்டியை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு, முழுமையாக குணமடைந்தார். இதைத்தொடர்ந்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் கூறுகையில், பெண்ணின் மார்பில் இருந்து சுமார் 6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்படுவது தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவே முதல்முறை. முத்துவிடம் இருந்து அகற்றப்பட்ட கட்டி சாதாரண வகை என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த கட்டியின் மாதிரி கிண்டி புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின்னர் மேல்சிகிச்சை குறித்து ஆராயப்படும் என்றார்.

Next Story