சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் குவைத், சார்ஜா, கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.46 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 118 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த பெண் பயணி மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கவரிங் நகைகள் இருப்பதாக அவர் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவற்றை சோதனை செய்ததில் அவை அனைத்தும் தங்க நகைகள் என தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 488 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.
அதேபோல் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியின் சூட்கேசில் பெண்கள் தலைக்கு அணியும் ‘ஹேர்பேண்ட்’, ‘டியோடிரன்ட்’ ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள 367 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவரை சோதனை செய்த போது, அவரது உடைமைகளில் ஏதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துசென்று சோதனை செய்தனா். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மாத்திரைகளாக மாற்றி, மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். அவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 263 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 3 பேரிடம் இருந்து ரூ.46 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 118 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story