இயற்கை சீற்ற பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
இயற்கை சீற்ற பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டி
நீலகிரியில் இயற்கை சீற்ற பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயிர் காப்பீடு
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி காப்பீடு நிறுவனம் மூலம் 2021-2022-ம் ஆண்டு ரபி பருவத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் பயன்பெறலாம். நீலகிரியில் உருளைக்கிழங்கு, வாழை, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்.
பிரீமியம் தொகையாக உருளைக்கிழங்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,890.60, வாழை ரூ.4,347.20, முட்டைகோஸ் ரூ.3,892.72, கேரட் ரூ.3,630.90, பூண்டு ரூ.4,949.88, இஞ்சி ரூ.4,532.46 செலுத்த வேண்டும். புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்பிற்கும், விதைப்பை தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாய ஏற்பாடுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும். பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்யப்படும்.
பொது சேவை மையம்
கடன் பெறாத விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள வங்கிக் கணக்கில் பயிர் காப்பீடு தொகையை செலுத்தலாம். மேலும் விவரங்களை அறிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகளின் நலன் கருதி பிரீமியம் தொகை செலுத்த ஊட்டி, குன்னூர், கோத்தகிரி வட்டாரங்களில் தலா ஒரு பொது சேவை மையம், கூடலூர் வட்டாரத்தில் 8 பொது சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
பயிர் காப்பீடு செய்ய முட்டைகோசுக்கு வருகிற ஜனவரி 31-ந் தேதி, உருளைக்கிழங்கு மற்றும் பூண்டுக்கு பிப்ரவரி 15-ந் தேதி, வாழை, கேரட், இஞ்சிக்கு பிப்ரவரி 28-ந் தேதி கடைசி நாளாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story