கல்லால் தாக்கி தொழிலாளி கொலை


கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 12 Nov 2021 2:19 AM IST (Updated: 12 Nov 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

அயோத்தியாப்பட்டணம், நவ.12-
சேலம் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அவர் ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிர்வாண நிலையில் பிணம்
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் முட்புதரில் ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காரிப்பட்டி போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் அயோத்தியாப் பட்டணம் சந்தைபேட்டை அருகே வசித்து வந்த குழந்தைவேலு (வயது 48) என்பதும், திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த அவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிந்தது. மேலும் மர்ம நபர்கள் யாரோ அவரை முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்து, உடலை புதரில் வீசிச்சென்றது தெரிந்தது. 
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த பயங்கர கொலை குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதையடுத்து போலீசார் குழந்தைவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
ஓரினச்சேர்க்கை-கள்ளக்காதல்?
இதனிடையே குழந்தைவேலு பிணமாக கிடந்த பகுதியில் தண்டவாளத்தின் மறுபுறம் அவரது வேட்டி, சட்டை கிடந்தன. அவற்றில் ரத்தக்கறைகள் ஏதும் இல்லை. இதனால் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் அவரை கொலை செய்து, உடலை நிர்வாண நிலையில் புதரில் வீசிச்சென்றது யார்?, கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை தொடர்பாக குழந்தைவேலுவுடன் வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்து, உடலை புதரில் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story