பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் கடந்த மாதம் 9-ந்தேதி ஏரி முழுவதுமாக நிரம்பியது.
ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 10-ந் தேதி 3 மற்றும் 13 எண்கள் கொண்ட மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதன் பின்னர் மழை நின்றதால் நீர்வரத்து குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு 500 கனஅடி வீதம் மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பூண்டி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக மிக கனமழை பெய்தது.
இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதையடுத்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிரிக்கப்பட்டது.நேற்று ஏரிக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதாவது 10 ஆயிரம் கன அடி வீதம் 3, 4, 5, 11, 12, 13 எண்கள் கொண்ட மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆறு பாயும் வழித்தடத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story