வாய்க்கால் கரை உடைந்ததால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது


வாய்க்கால்  கரை  உடைந்ததால்  விவசாய  நிலங்களுக்குள்  தண்ணீர்  புகுந்தது
x
தினத்தந்தி 13 Nov 2021 1:12 AM IST (Updated: 13 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்கால் கரை உடைந்ததால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

ஓமலூர், நவ.13-
தொடர் மழையால் மேற்கு, கிழக்கு சரபங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாய்க்கால் கரை உடைந்ததால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து, மஞ்சள், சாமந்தி பயிர்கள் மூழ்கின.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் விடாமல் பலத்த மழை பெய்தது. ஏற்காடு மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால், கிழக்கு, மேற்கு சரபங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகளின் கரைகளை தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடியது.
இதனிடையே மேற்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக டேனிஸ்பேட்டை பகுதியில் உள்ள விதைப்பண்ணை, பெத்தேல் பாலம் ஆகிய பகுதிகளில் ஆற்றோரம் இருந்த விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. 
வாய்க்காலில் உடைப்பு
மேலும் காடையாம்பட்டி கோட்டேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகமானது. இதன் காரணமாக மாரக்கவுண்டன் புதூர் அருகே உபரிநீர் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்களுக்குள்ளும், ஒரு சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சாமந்தி பூக்கள், மஞ்சள் போன்ற பயிர்கள் சேதம் அடைந்தன.
தொடர்ந்து சேதம் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கினர். மேலும் வாய்க்காலின் மதகை அடைத்து, சரபங்கா ஆற்றிலேயே தண்ணீரின் திருப்பி விட்டனர். இதன் காரணமாக சரபங்கா ஆற்றின் குறுக்கே உள்ள நாகமலை தடுப்பணை நிரம்பி வழிந்தது. 
ஆக்கிரமிப்பு
சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரி நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது. இதில் இருந்து வெளியேறிய உபரி வாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக தாராபுரம் செல்லாண்டியம்மன் கோவில் அருகே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் பயிர்கள் சேதம் அடைந்தன.
கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு அருகே கோட்டக்கல் ஏரிக்கு செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருந்தது. இதனை காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ் உத்தரவின்பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் வீடு இடித்து அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து வாய்க்காலில் தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. 
இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, வடமனேரி உபரிநீர் வாய்கால், கோட்டை ஏரியில் இருந்து பண்ணப்பட்டி ஏரிக்கு செல்லும் வாய்க்கால் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் அளவீடு செய்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை அகலப்படுத்துவதுடன், கரையை பலப்படுத்த வேண்டும் என்றனர்.

Next Story