பிட்காயின் விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை - பசவராஜ் பொம்மை பேட்டி


பிட்காயின் விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை - பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2021 2:55 AM IST (Updated: 13 Nov 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

பிட்காயன் விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

 முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆதாரங்கள் இல்லை

  பிட்காயின் விவகாரம் குறித்து நான் தினமும் பதிலளிக்க முடியாது. இந்த விஷயத்தில் காங்கிரசார் பா.ஜனதா மீது குற்றம்சாட்டுகிறார்கள். இதில் என்ன முறைகேடு நடந்துள்ளது என்பதை அவர்கள் தெளிவாக கூற வேண்டும். அவர்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் அதை விசாரணை அமைப்புகளிடம் வழங்கட்டும். 9 மாதங்களுக்கு முன்பே இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் நாங்கள் வழங்கிவிட்டோம். அந்த அமைப்பினர் தான் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சி.பி.ஐ. அமைப்பின் இன்டர்போல் பிரிவுக்கும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசார் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. இந்த விவகாரத்தில் எங்கள் அரசு திறந்த மனதுடன் இருக்கிறது. இதில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை. நாங்கள் யாரும் இந்த முறைகேட்டில் ஈடுபடவில்லை. விசாரணை நடக்கிறது. உண்மைகள் வெளிவரும். காங்கிரசார் அரசியல் உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டி வருகிறார்கள். பிட்காயின் முறைகேடு என்றால் என்ன என்பதை காங்கிரசார் கூற வேண்டும்.

மதமாற்ற தடை சட்டம்

  உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் திருப்பதியில் 13-ந்தேதி (நாளை) நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன். அதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மாநிலத்தின் அனைத்து போக்குவரத்து கழகங்களையும் புனரமைக்க ஒரு குழுவும், மின் வினியோக நிறுவனங்களை மேம்படுத்த ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சில மடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிற மாநிலங்களில் அமலில் உள்ள இத்தகைய சட்டத்தை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அதன் அடிப்படையில் கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் இயற்றப்படும். ஆசை காட்டி ஒருவரை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முடியாது என்று அரசியல் சட்டம் சொல்கிறது. கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல்கள் வழங்குமாறு கோரி எதிர்க்கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் பெற்று எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  முன்னதாக குஜராத் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அரவிந்த்குமாருக்கு பாராட்டு விழா விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த நீதிபதிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

Next Story