மளிகை பொருட்களை வாங்கி ரூ45 லட்சம் மோசடி

மளிகை பொருட்களை வாங்கி ரூ.45 லட்சம் மோசடி
திருப்பூர்,
பல்லடம் அருகே ஆன்லைன் மூலமாக ஆர்டர் கொடுத்து மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி ரூ.45¼ லட்சம் மோசடி செய்த கடைக்காரரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆன்லைன் மூலமாக ஆர்டர்
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அப்துல் முனாப் (வயது 48). வியாபாரி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அய்யம்பாளையத்தில் குடோன் வைத்துள்ளார். இவர் மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், கோதுமை மொத்தமாக தேவை இருப்பதாக ஆன்லைன் மூலமாக விளம்பரம் செய்தார். தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநில மொத்த வியாபாரிகளிடம் இருந்து மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், கோதுமை ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கினார். வியாபாரிகள் அனுப்பும் சரக்குகளை பல்லடம் அய்யம்பாளையத்தில் உள்ள குடோனில் இருப்பு வைத்து பின்னர் மொத்தமாக பொருட்களை வியாபாரம் செய்து வந்தார்.
ஒவ்வொரு முறையும் அப்துல் முனாப் கேட்கும் சரக்குகளை மொத்த வியாபாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு அப்துல் முனாப் மொத்த தொகையில் 20 சதவீதம் பணத்தை மட்டும் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.மீதம் உள்ள பணத்துக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை வர்த்தகம் செய்துள்ளார்.
கடைக்காரர் கைது
இதில் சென்னை காஞ்சீபுரத்தை சேர்ந்த முருகவேல் (34) என்பவரிடம் இருந்து மிளகாய் வற்றலை வாங்கி விட்டு ரூ.1½ லட்சம் கொடுத்துள்ளார். மீதம் உள்ள ரூ.8 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவரது வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்பியது. இந்தநிலையில் அப்துல் முனாப் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து முருகவேல் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அப்துல் முனாப் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, குஜராத் போன்ற வெளிமாநில வியாபாரிகளிடம் இருந்தும் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி ரூ.45 லட்சத்து 33 ஆயிரத்தை மோசடி செய்ததாக தெரிகிறது. மொத்தம் 6 பேரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அப்துல் முனாப்பை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story