3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மற்றும் வார நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பு பணியாளர்களைக் கொண்டு ஒவ்வொரு வார்டிலும் வீடு வீடாகச் சென்று செல்போன் எண்ணை கொண்டும், கோவிட் செயலியின் மூலமும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் விவரங்களை பிரித்து எடுக்கும் பணிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9 லட்சத்து 59 ஆயிரத்து 200 ஆகும். இன்றைய நாள் வரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 507 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 210 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.2 லட்சத்து 13 ஆயிரத்து 306 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
கையிருப்பில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 155 தடுப்பூசி உள்ளது. சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story