உரத்தை பங்கிட்டு பயிர்களுக்கு தூவும் விவசாயிகள்


உரத்தை பங்கிட்டு பயிர்களுக்கு தூவும் விவசாயிகள்
x
தினத்தந்தி 19 Nov 2021 10:51 PM IST (Updated: 19 Nov 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் உரத்தை பங்கிட்டு பயிர்களுக்கு தூவிவருகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம், 
தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் உரத்ைத பங்கிட்டு பயிர்களுக்கு தூவிவருகின்றனர். 
நல்ல மழை
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி நல்ல மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வந்தாலும் நெற்பயிர் களுக்கு தேவையான உரம் மற்றும் யூரியா கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர். 
ஒரு மூடை 
இதனிடையே ஆர்.எஸ். மங்கலம், சோழந்தூரை சுற்றி உள்ள பல கிராமங்களில் ஒரு மூடை உரம் மற்றும் யூரியாவை வாங்கி 3 அல்லது 4 விவசாயிகள் அதை தங்களுக்குள் பங்கு பிரித்து நெற் பயிர்களுக்கு தூவி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு மூடை யூரியாவை 2 விவசாயிகள் சேர்ந்து பங்கு பிரித்து பயிர்களுக்கு தூவி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி முத்துகூறியதாவது:-இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. நெற்பயிர்கள் மழையால் நன்கு வளர்ந்து வருகிறது. மழை சரியாக பெய்து வரும் நிலையில் நெற்பயிர்கள் செழிப்பாக வளர தேவையான உரம் மற்றும் யூரியா கிடைப்பதில் கடும் தட்டுப்பாடாக உள்ளது. யூரியா மற்றும் உரம் சரிவர கிடைப்பதில்லை. 
தட்டுப்பாடு
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ஒரு மூடை தூவ வேண்டும்.ஆனால் யூரியா தட்டுப்பாடாக இருப்பதால் 2 ஏக்கர் நெற்பயிருக்கு ஒரு மூடை தூவி வருகிறோம். யூரியா தட்டுப்பாட்டால் இந்த ஆண்டு நெற்பயிர்கள் செழிப்பாக வளருமா என்ற ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது. 
எனவே உரம் மற்றும் யூரியா விவசாயிகள் அனைவருக்கும் கூடுதலாக கிடைப்பதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story