செதுக்கரை மலையில் ராட்சத பாறைகள் உருண்டதால் அலுமினிய தொழிற்சாலை சேதம்


செதுக்கரை மலையில் ராட்சத பாறைகள் உருண்டதால் அலுமினிய தொழிற்சாலை சேதம்
x
தினத்தந்தி 20 Nov 2021 6:23 PM IST (Updated: 20 Nov 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் செதுக்கரை மலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் அலுமினிய தொழிற்சாலை சேதம் அடைந்தது. 25 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

குடியாத்தம்

குடியாத்தம் செதுக்கரை மலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் அலுமினிய தொழிற்சாலை சேதம் அடைந்தது. 25 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். 

குடியாத்தம் செதுக்கரை மலைப்பகுதி ஆகும். இந்த மலையைச் சுற்றி ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர்.

செதுக்கரை மலையில் உள்ள ஒரு வீட்டில் கூலித்தொழிலாளி குருநாதன் அவரது மனைவி கலையரசி (வயது 35), மாமனார் கோவிந்தன் (72)ஆகிேயாருடன் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டிற்கு அருகிலேயே கோபிநாத் என்பவர் சிறிய அளவிலான அலுமினிய தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் செதுக்கரை மலையில் இருந்து 2  ராட்சத பாறைகள் உருண்டு குருநாதன் வசிக்கும் குடிசை மீதும் கோபிநாத்தின் அலுமினிய தொழிற்சாலை மீதும் விழுந்தது. அப்போது கோவிந்தன் மற்றும் அவரது மகள் கலையரசி ஆகியோர் உள்ளே சிக்கிக்கொண்டனர். அவர்களை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அலுமினிய தொழிற்சாலையில் எந்திரங்கள், அலுமினியப் பொருட்கள் என ரூ.7 லட்சம் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
அந்த பாறைகள் மீண்டும் சரியும் அபாயம் உள்ளதால் உடனடியாக பாறைகள் விழுந்த பகுதியில் சுற்றி இருந்த வீடுகளில் வசித்த 25 வீடுகளைச் சேர்ந்த பொதுமக்களை பத்திரமாக அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., தாசில்தார் லலிதா, நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் சவுந்ந்தர்ராஜன் டி.சி.எம்.எஸ். தலைவர் ஜே.கே.என்.பழனி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள், சரிந்த பாறைகளை பத்திரமாக அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். தங்களுக்கு மாற்று இடங்களை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் குடியாத்தம்  அமலுவிஜயன் எம்.எல்.ஏ.உறுதி அளித்தார்.


Next Story