தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்

மத்திய அரசை கண்டித்து தடையை மீறி நடைபயணம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
தடையை மீறி நடைபயணம்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோவிலில் இருந்து தேனி நேரு சிலை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் செல்ல திட்டமிட்டனர்.
இதற்காக சாலைப்பிள்ளையார் கோவில் அருகில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று வந்தனர். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் அங்கிருந்து நடைபயணமாக புறப்பட முயன்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நடைபயணம் செல்ல அனுமதி பெறவில்லை என்றும், தடையை மீறி சென்றால் கைது செய்யப்போவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் செல்ல முயன்றனர்.
28 பேர் கைது
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 28 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் போடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபயணம் நேற்று நடந்தது. இதற்கு போடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முசாக்மந்திரி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முகம்மது ரசூல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகேசன், நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
போடி இந்திராகாந்தி சிலையில் இருந்து நடைபயணம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரெங்கநாதபுரத்தில் நிறைவடைந்தது. மத்திய அரசு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கிருஷ்ணவேணி, நகர பொதுச்செயலாளர் அரசகுமாரன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், வட்டார தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story