தூத்துக்குடி மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்ற 3 உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்ற 3 உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 24 Nov 2021 4:02 PM GMT (Updated: 24 Nov 2021 4:02 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்ற 3 உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்ற 3 உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது
இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சாகுபடி
மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் எக்டேர் பரப்பில் மானாவரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. தாமிரபரணி வடிநில கோட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் எக்டேர் பரப்பில் வாழை மற்றும் தோட்டக்கலை பயிர்களும் மற்றும் 12 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகளும் நடந்து வருகிறது.
வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ரத்து
இந்த நிலையில் விவசாயிகளிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் உரக்கடைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்ற 3 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. முறையாக இருப்பு விவரம் பராமரிக்காமல் உரங்களுடன் வேறு இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாக புகார் பெறப்பட்ட 5 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
விவசாயிகள் உரம் வாங்க செல்லும்போது தங்களுடைய ஆதார் அட்டையை எடுத்து சென்று விற்பனை முனைய கருவியில் பில் போட்டு அதில் உள்ள தொகையை மட்டுமே செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, உரங்களோடு மற்ற பொருட்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தினாலோ அல்லது உரங்கள் இருப்பு வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு தர மறுத்தாலோ அத்தகைய கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Next Story