ரூ.3½ லட்சம் மோசடி செய்த மேலாளர் கைது


ரூ.3½ லட்சம் மோசடி செய்த மேலாளர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2021 4:56 PM GMT (Updated: 24 Nov 2021 4:56 PM GMT)

சின்னமனூரில் உள்ள கூட்டுறவு வங்கியில், ரூ.3½ லட்சம் மோசடி செய்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.

தேனி:

ரூ.3½ லட்சம் மோசடி

தேனி மாவட்டம் சின்னமனூரில், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. இங்கு கிளை மேலாளராக, கம்பம் டி.எஸ்.கே. நகரை சேர்ந்த சேகர் (வயது 58) பணியாற்றினார். 

இந்த வங்கி கிளையில் நிரந்தர வைப்பு தொகை வைக்காத நபர்களின் பெயரில் வைப்புத் தொகை வைத்ததாக போலியாக கணக்கு வைத்து, அந்த தொகைக்கான வட்டியை இவர் எடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. மேலும் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி வழங்கியும் மோசடி செய்துள்ளார்.

அந்த வகையில் சேகர், கடந்த 2014-2015-ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 137 மோசடி செய்துள்ளார். வங்கியில், கூட்டுறவு அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலாளர் கைது 

வங்கியில் தணிக்கை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உத்தமபாளையம் கூட்டுறவு சார்பதிவாளர் சலீம் புகார் அனுப்பினார். 

அதன்பேரில் மதுரை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த மோசடி குறித்து தேனி வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து சேகரை நேற்று கைது செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story