வெள்ளம் வற்றிய பிறகு தரைப்பாலங்கள் சீரமைக்கப்படும். அமைச்சர் துரைமுருகன் பேட்டி


வெள்ளம் வற்றிய பிறகு தரைப்பாலங்கள் சீரமைக்கப்படும். அமைச்சர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 24 Nov 2021 6:00 PM GMT (Updated: 24 Nov 2021 6:00 PM GMT)

வெள்ளம் வற்றியதும் தரைப்பாலங்கள் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

கே.வி.குப்பம்

வெள்ளம் வற்றியதும் தரைப்பாலங்கள் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

கே.வி.குப்பம் தாலுகா கொத்தமங்கலம் ஊராட்சி காமராஜபுரத்தில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஆற்றில் அடித்துச் சென்ற வீடுகளையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற வீடுகளையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று மாலை நேரில் பார்வையிட்டனர். அப்போது வீடுகளை இழந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

 பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

சீரமைக்கப்படும்

இந்த பாதிப்புகளை நேரில் கண்டபோது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. என்னுடைய பணி தமிழகம் முழுவதும் இருக்கிறது. இதற்காக நேரம் ஒதுக்கி அதன் ஒரு பகுதியாக நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் ஏனோ தானோ என்று தரமற்றதாகக் கட்டப்பட்டுள்ளன. என்னுடைய தொகுதியிலேயே இரண்டு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளம் வற்றிய பிறகு தரைப்பாலங்கள் முழுமையாக சீரமைக்கப்படும். 

அதேபோல தடுப்பணைகள் கட்டப்படும். நான் இந்த பகுதி சீரமைக்கப்படும் வரை மீண்டும் மீண்டும் வருவேன். இங்குள்ள மக்களின் முகம் அனைத்தும் எனக்குப் பழகிய முகங்கள். அவர்கள் முகத்தில் மீண்டும் மலர்ச்சி ஏற்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின்போது தாசில்தார் சரண்யா, ஒன்றியக் குழுத்தலைவர் எல்.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இ.கோபி, பா.கலைச்செல்வி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்கள் லத்தேரி சுப்பிரமணி, கே.வி.குப்பம் செந்தில்குமாரி, வருவாய்த் துறையினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Next Story