மாவட்ட செய்திகள்

திருப்பணிகள் ஆகம விதிப்படி தான் நடக்கிறது அமைச்சர் சேகர்பாபு பேட்டி + "||" + Interview with Minister Sekarbabu

திருப்பணிகள் ஆகம விதிப்படி தான் நடக்கிறது அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருப்பணிகள் ஆகம விதிப்படி தான் நடக்கிறது அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருப்பணிகள் ஆகம விதிப்படி தான் நடக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மணவாளக்குறிச்சி, 
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருப்பணிகள் ஆகம விதிப்படி தான் நடக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
பகவதி அம்மன் கோவில்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் சுயம்பு புற்று வடிவிலானது. கேரள பெண் பக்தர்கள் இருமுடிக் கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 2- ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோவிலின் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. 
தேவபிரசன்னம்
அதைத்தொடர்ந்து கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டது. 
முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. ஜூலை 19-ந் தேதி வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று ரூ.1.08 கோடியில் கோவில் திருப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கி வைத்தார். 
ஆகம விதிப்படி
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நாள் முதல் சாதி, சமய வேறுபாடின்றி அனைவரும் அவரவர் வழிபாட்டு முறையில் சுதந்திரமாக வழிபாடு நடத்தி வருகிறார்கள். மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த நாள் முதல் நான் 3 முறை வந்து ஆய்வு செய்தேன். ஆன்மிக பெரியோர்களின் கருத்து கேட்டு கோவில் திருப்பணிகள் ஆகம விதிப்படி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவ பிரசன்னம், வாஸ்துவில் கூறியபடிதான் ரூ.1.08 கோடியில்  புனரமைப்பு பணிகள் நடக்கிறது. பிரசன்னம் பார்த்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர் என்ற முறையில் நானும் பங்கேற்றேன். இன்று திருப்பணிகள் தொடங்கும் நாளில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தியது நியாயமற்றது. அவர்கள் முன்னிலையில் பரிகாரபூஜை செய்வது சாத்தியமற்றது. அவர்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி நேரடியாக தரலாம். நியாயமான கருத்துகள், ஆலோசனைகளை இந்த அரசு ஏற்கும். தவறுகளை சுட்டிக்காட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
அடிப்படை வசதி
தக்கலை அருகே கேரளபுரம் கருப்பு - வெள்ளை நிறம் மாறும் அதிசய விநாயகர் கோவிலை அடுத்த முறை வரும்போது பார்வையிடுவேன். அந்த கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுசீந்திரம் கோவில்
முன்னதாக காலையில் அமைச்சர் சேகர்பாபு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றார். அவரை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் வரவேற்றார். அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். 
பின்னர் 133 அடி உயரம் உள்ள ராஜகோபுரத்தில் 7 அடுக்குகளில் வரையப்பட்டுள்ள ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள் அடங்கிய பச்சிலை ஓவியங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம்  கூறியதாவது:- 
ஓவியம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழமையான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கோவில் மூலவர் வரையிலும் தண்ணீர் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குமரி மாவட்டம் செல்லும் போது சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலையும் ஆய்வு செய்ய என்னை அறிவுறுத்தினார். 
அதன்படிஇங்கு வந்துள்ளேன். மூலிகையால் உருவாக்கப்பட்ட ரசாயன கலவையோடு ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.
கும்பாபிஷேகம்
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து விரைவில் திருப்பணிகள் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோவில் பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அமல்படுத்தப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
திருவட்டார்
அதன்பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கும் அமைச்சர் சேகர்பாபு சென்று திருப்பணிகளை பார்வையிட்டார்.
அப்போது கோவில் கொடி மரம் அருகில் திருவிழா நடைபெற்று பத்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பழைய பூக்கள் தொங்கிக்கொண்டிருப்பது சரியல்ல. அவற்றை ஏன் அப்புறப்படுத்தவில்லை, மேல்பகுதி சுவரில் செடி, கொடிகள் வளர்ந்துகாணப்படுகிறது. இப்படியா கோவிலை வைத்திருப்பது?. இவற்றை அகற்றவேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.
அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பணிகள்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கியது. ஆனால் இன்னும் முடிவடையவில்லை. தி.மு.க.அரசு பொறுப்பேற்ற பின் நான் 3 முறை திருவட்டார் கோவிலுக்கு வந்து திருப்பணிகளை துரிதப்படுத்தி உள்ளேன். வரும் ஜூன் 6-ந் தேதி அன்று திருவட்டார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும். 
கொடி மரத்தில் தங்க முலாம் பூசவேண்டிய பணிகளில் சிறிய பிரச்சினை உள்ளது. அது சரி செய்யப்படும். மியூரல் ஓவியங்களில் சில குறைகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் இயற்கை மாறாத வண்ணம் சரிசெய்யப்படும். இயற்கை மூலிகைகள் கொண்டு ஓவியம் வரையப்படுவதால் இந்த ஓவியங்களின் பழமை மாறாது. ஓவியங்கள் சிறப்பாக வரைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக ஓவியம் வெளியே தெரிவதற்கு போதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தற்போது பூஜையின் போது தவில் மட்டுமே இசைக்கப்படுகிறது. நாதஸ்வரம் இசைக்கப்படுவது இல்லை, நாதஸ்வர வித்வான் இல்லை என்ற புகார் வந்துள்ளது. உடனே கோவிலில் நாதஸ்வர வித்வான் நியமிப்பதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளேன். 
தங்க அங்கி
திருவட்டார் கோவிலில் நிதியைப்பற்றி எந்த வித கவலையும் கொள்ளாமல் எப்படியாயினும் சிறப்பாக விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதிக வருவாய் உள்ள கோவில்களில் உபரி நிதியை வேறு கோவில்களுக்கு பயன்படுத்தப்படும். 
எந்த கோவிலிலும் ஒரு கால பூஜை கூட நடக்காமல் இருக்கக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் தெளிவாக இருக்கிறார். 135 கோடி ரூபாய் நித்ய கால, ஒரு கால பூஜைகள் நடக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பூஜைகளுக்கு வழங்கப்படும் தொகை குறைவாக உள்ளது. இதை வைத்து பூஜைகள் நடத்துவது சிரமம் என தகவல் வந்துள்ளது. எனவே இந்த தொகையை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி அனைத்து திருக்கோவில்களும் ஒளிரும். கோவிலில் சாமிக்கு தங்க அங்கி அணிவிப்பது குறித்து சாத்தியக்கூறுகள் இருந்தால் அது செயல்படுத்தப்படும். 
கல்லூரிகள்
அறநிலையத்துறை சார்பில் கல்லூரி தொடங்கப்படும் நோக்கமே அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏழை- எளிய மக்கள் கல்வி பயில தான். அதன்படி தான் அறநிலையத்துறையின் சார்பில் நான்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.