கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டியில் திருமுருகநாத சாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து அதிரடியாக மீட்கப்பட்டது.
திருமுருகநாதசாமி கோவில்
திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டியில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான திருமுருகநாதசாமி கோவில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கோவிலுக்கு சொந்தமான 5.96 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கோவில் நுழைவுவாயில் அருகே ஒரு பகுதியை தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பக்தர்கள் சிலர் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்பேரில் கோவில் நிலம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
நிலம் மீட்பு
இதில் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக கையகப்படுத்தப்பட்டு, அதற்கு கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story