வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது


வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது
x
தினத்தந்தி 25 Nov 2021 1:52 PM GMT (Updated: 25 Nov 2021 1:52 PM GMT)

முதுமலையில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

கூடலூர்

முதுமலையில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

காலநிலைக்கு ஏற்ப கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காட்டுயானைகள், புலிகள், செந்நாய்கள், கரடிகள், அரிய வகை கழுதைப்புலிகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கூடலூர், முதுமலை பகுதியில் பெய்து வருகிறது. 

இதனால் மழைக்காலத்தில் வனம் பசுமையாகவும், கோடை காலத்தில் வறட்சியாகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு காலகட்டங்களில் நிலவும் கால நிலைகளுக்கு ஏற்ப வனவிலங்குகளின் நடமாட்டத்தை அறிவதற்காக பருவமழைக்கு முன்பு மற்றும் பின்பு என வனத்துறை மூலம் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

37 குழுக்கள் பிரிப்பு

இந்த நிலையில் கூடலூர், முதுமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து பருவமழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி புலிகள் காப்பக கள இயக்குனரும், நீலகிரி மண்டல வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ் உத்தரவின்பேரில் முதுமலையின் உள்வட்ட பகுதியான கார்குடி, தெப்பக்காடு, நெலாக்கோட்டை, முதுமலை, மசினகுடி வனச்சரகங்களில் நேற்று தொடங்கப்பட்டது. 

தொடர்ந்து காலை 7 மணிக்கு தலா 4 பேர் என 37 குழுக்களாக பிரிந்து வன ஊழியர்கள் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். நேரில் காணுதல், கால் தடங்கள், எச்சங்கள் ஆகியவற்றின் மூலம் வனவிலங்குகள் கணக்கெடுக்கப்பட்டது. 

நவீன கருவி

மேலும் தொலைவில் நிற்கும் வன விலங்குகளை அடையாளம் காணவும், அது எவ்வளவு தூரத்தில் நிற்கிறது என அறியும் வகையிலும் ரேஞ்ச் பைன்டர் என்ற நவீன கருவி மூலமாக வனத்துறையினர் பார்வையிட்டு கணக்கெடுத்தனர். இதேபோல் வனத்தின் எந்த பகுதியில் இன்று கணக்கு எடுக்கிறோம் என்பதை தெரியும் வகையில் காம்பஸ் என்ற கருவியை கொண்டு வன ஊழியர்கள் கணக்கெடுத்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வருகிற 29-ந் தேதி வரை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனச்சரகங்களில் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடக்கிறது என்றனர்.


Next Story