புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் தண்ணீர்
சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் உள்ள தண்ணீரை அகற்றவும், தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகங்கை.
குவிந்து கிடக்கும் குப்பை
மதுரை நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவலம் காணப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாகன், நாகமலைபுதுக்கோட்டை.
தெருவிளக்குகள் தேவை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரெயில்வே மேம்பாலம், காந்தி நகர் பகுதி மேம்பாலம் இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும்.
சுந்தரமூர்த்தி, அருப்புக்கோட்டை.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அச்சம்பட்டியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லையும் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
சந்தோஷ், திருமங்கலம்.
சேறும், சகதியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி ஊராட்சி பி.எஸ்.ஆர். நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இ்ப்பகுதியில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக இருப்பதால் தற்போது மழைபெய்து சேறும், சகதியுமாக நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் சாலை வசதி அமைத்து தருவார்களா?
பொதுமக்கள், வாணியங்குடி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நிவாரப், பேரையூர்.
எரியாத தெருவிளக்குகள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரம் 1-வது தெருவில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும், சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், அருப்புக்கோட்டை.
தொல்லை தரும் நாய்கள்
மதுரை சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ். காலனி, ஸ்ரீராம் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகள் இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனங்களில் வருபவர்களையும், நடந்து செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு முழுவதும் குரைத்துக்கொண்டே இருப்பதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடிக்க வேண்டும்.
மாரி, சம்மட்டிபுரம்.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இவ்வழியாக செல்லும் போது வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பார்களா?
குமார், திருவாடானை.
Related Tags :
Next Story