முழு கொள்ளளவை வேகமாக நெருங்கும் திருமூர்த்திஅணை
முழு கொள்ளளவை வேகமாக நெருங்கும் திருமூர்த்திஅணை
தளி,
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை வேகமாக நெருங்குகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. 60 அடி உயரமும் இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்றன பாலாறு, உழுவிஆறு, கொட்டையாறு, பாரப்பட்டிஆறு, குருமலைஆறு, வண்டியாறு, உப்புமண்ணம்ஓடை, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது. அது தவிர அணையின் உயிர்நாடியாக அப்பநீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் விளங்கிவருகிறது.
இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. இந்த கால்வாய் பரம்பிக்குளம் அணையில் தொடங்கி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக திருமூர்த்தி அணையை வந்தடைகிறது.அணைக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்து மற்றும் நீர் இருப்பின் பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் அணையை ஆதாரமாகக் கொண்டு உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கினர் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வௌ்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருமூர்த்தி அணையின் முக்கிய நீராதமான பாலாறு மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நடப்பாண்டில் கடந்த 5ந் தேதி மற்றும் நேற்று என 2 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்தமழையின் காரணமாக காண்டூர்கால்வாய் மற்றும் பாலாறு மூலமாக அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 4ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தாலும் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து 55.73அடியை கடந்து உள்ளது.
அணைக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.மேலும் நீர்வரத்து அதிகரித்து அணை அதன் முழு கொள்ளளவை நெருங்கினால் அணையின் பாதுகாப்பு கருதி அங்குள்ள ஷட்டர்கள் வழியாக பாலாற்றில் உபரிநீர் திறப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மழையின் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நள்ளிரவில் அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. நேற்று காலை மழையின் தாக்கம் குறைந்ததால் படிப்படியாக நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 55.73 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 1387 தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 910 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அணைப்பகுதியில் 55 மில்லி மீட்டரும், நல்லாறு பகுதியில் 52 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story