கோத்தகிரி அருகே சேறும் சகதியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கோத்தகிரி அருகே சேறும் சகதியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே சேறும் சகதியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சேறும், சகதியுமான சாலை
கோத்தகிரி அரவேனு அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா மையமாக இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த பகுதியில் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் குக்கிராமங்கள் அதிகமாக உள்ளதால் அரசு, தனியார் மினி பஸ்கள், பள்ளி வாகனங்கள், பசுந் தேயிலை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பகுதியில் சாலையோரத்தில் சிலர் கட்டிட கழிவுகளை இரவு நேரத்தில் கொட்டிச்சென்றனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக அந்தப்பகுதியில் மண் மூடி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் நேற்றுகாலை இந்த சாலை வழியாகச் சென்ற சில வாகனங்கள் சேற்றில் சிக்கி கொண்டன. இதனால் அந்தப்பகுதியில் சாலையின் இருபுறத்திலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் சேர்ந்து சேற்றில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். அதன் பின்னரே அங்கு போக்குவரத்து பாதிப்பு சரியானது.
சீரமைக்க வேண்டும்
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலையோரத்தில் சட்டவிரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டுவதே இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் ஆகும். எனவே இந்தப்பகுதியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கட்டிட கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். அத்துடன் சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story