குமரியில் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

குமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்தநிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை விடிய, விடிய சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த மழை நேற்று காலையில் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழை பின்னர் ஓய்ந்தது. அதன்பிறகு லேசான தூறல் மட்டுமே போட்டது.
பேச்சிப்பாறை அணையில் அதிகாலை முதல் நீர்வரத்து பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் தண்ணீர் உள்வரவாக இருந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 694 கன அடி நீர் உள்வரவாக வந்தது. இது கீழ் கோதையாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்டது.
பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் நீர் உள்வரவாக வந்த நிலையில் அணையிலிருந்து உபரியாக நேற்று காலை 11 மணிக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 224 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு
இதனால் திற்பரப்பு அருவியிலும், குழித்துறை தாமிரபரணியாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
இதே போல் பெருஞ்சாணி அணைக்கும் நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 911 கன அடி நீர் உள் வரவாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1,194 கன அடி நீர் உபரி மதகுகள் மற்றும் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
நேற்று பகல் நிலவரப்படி பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் வினாடிக்கு மொத்தம் 21 ஆயிரத்து 605 கன அடி நீர் வந்தது. அது இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 6 ஆயிரத்து 418 கன அடி திறந்து விடப்பட்டது.
மழை குறைந்ததால், மாலை 4 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 224 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 224 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1750 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1194 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு வந்த 272 கன அடி தண்ணீர், அப்படியே உபரியாக திறந்து விடப்பட்டது.
மலை கிராமங்கள் துண்டிப்பு
இதனால் மோதிரமலை குற்றியாறு தரைப்பாலத்தையும், அதன் அருகே உள்ள சிறிய பாலத்தையும் மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால், அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் குற்றியாறு, கல்லாறு, மாங்காமலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மழையின் காரணமாக மலையோர பகுதி மக்களின் தொழில்கள் முடங்கி, அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குழித்துறை தாமிரபரணி, பழையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் கரையோர மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
களியலில் 95.2 மி.மீ. பதிவு
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 50.2, பெருஞ்சாணி அணை- 58.2, சிற்றார்-1 அணை- 37.4, சிற்றார்-2 அணை-34.2, புத்தன் அணை- 56.8, மாம்பழத்துறையாறு அணை- 46.4, பொய்கை அணை- 60, முக்கடல் அணை- 34, மேல் கோதையார்- 55, கீழ் கோதையார் -49, பூதப்பாண்டி-55.2, களியல்- 95.2, கன்னிமார்- 94.2, கொட்டாரம்- 30.2, குழித்துறை- 64.9, மயிலாடி-28.4, நாகர்கோவில்- 22, சுருளக்கோடு- 57, தக்கலை- 37, குளச்சல்- 8.6, இரணியல்- 13, பாலமோர்- 60.4, ஆரல்வாய்மொழி- 60, கோழிப்போர்விளை- 57, அடையாமடை- 27, குருந்தங்கோடு- 35.6, முள்ளங்கினாவிளை- 59.4, ஆனைக்கிடங்கு- 46.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று காலை உத்தரவு பிறப்பித்தார். இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி- கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நேற்று காலை நிலவரப்படி அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 15 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் மட்டும் 5 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 6 வீடுகளும் என மொத்தம் 26 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story