மாவட்ட செய்திகள்

35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர் + "||" + old man marriage his girlfriend after 35 years

35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்

35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
மண்டியாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதியவர் ஒருவர் காதலியை கரம் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் மேல்கோட்டையில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.
மைசூரு: மண்டியாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதியவர் ஒருவர் காதலியை கரம் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் மேல்கோட்டையில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். 

காதலுக்கு எதிர்ப்பு

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 65). இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு வந்து கூலி வேலை பார்த்தார். அப்போது இவருக்கும் மைசூருவை சேர்ந்த அவரது அத்தை மகளான ஜெயம்மா (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். 

இவர்களின் காதலுக்கு ஜெயம்மாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பெற்றோர் ஜெயம்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். சிக்கண்ணாவை மனதில் நினைத்து கொண்டு கல்நெஞ்சுடன் வேறு வழியின்றி வேறொருவருக்கு ஜெயம்மா கழுத்தை நீட்டினார். 

சந்திப்பு

ஆனால் காதலன் சிக்கண்ணா நினைவிலேயே இருந்ததால் ஜெயம்மாவால் கணவருடன் சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. சில ஆண்டுகள் கணவருடன் குடும்பம் நடத்திய ஜெயம்மா, 4 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். 

ஆனால் ஜெயம்மாவின் காதலன் சிக்கண்ணவோ, திருமணம் எதுவும் செய்யாமல் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்தார். இவ்வாறாக 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 

இந்த நிலையில், சமீபத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் சந்தித்து உள்ளனர். அப்போது தான் சிக்கண்ணா திருமணம் செய்யாமல் இருப்பது ஜெயம்மாவுக்கும், ஜெயம்மா கணவரை பிரிந்தது சிக்கண்ணாவுக்கும் தெரியவந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் இருவரும் கண்ணீர் சிந்தி பரஸ்பரம் விசாரித்து கொண்டனர். 

கரம் பிடித்தார்

இதையடுத்து கடந்த கால நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்ட சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மண்டியா மாவட்டம் மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களை நண்பர்கள் வாழ்த்தினர்.

இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.