கண்மாய் மடையில் உடைப்பு

கண்மாய் மடையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
காளையார்கோவில்,
காளையார்கோவில் ஒன்றியம் காஞ்சிப்பட்டி கிராமத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அக்கிராமத்தில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள காஞ்சி கண்மாய் முழுவதும் தண்ணீர் நிரம்பியது. இந்த கண்மாய் நீரை நம்பி சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப் பட்டுஉள்ளது. தற்போது வரை பெய்த மழையால் நெல் கதிர்கள் நல்ல நிலையில் உள்ளன. இந்த நிலையில் கண்மாயில் உள்ள மடை உடைந்து கடந்த 3 நாட்களாக தண்ணீர் வெள்ளம்போல் வெளியேறி விளைநிலத்தில் பாய்ந்ததில் பல ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மேலும் தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள மறவமங்கலம் ஆற்று பகுதிக்கு சென்று வீணானது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மடையில் உடைப்பு ஏற்பட்டவுடன் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுமார் 5 வருடத்திற்கு முன்பு கண்மாய் கரையை பலப்படுத்த குடிமராமத்து பணி நடை பெற்றது. கரையை மட்டும் உயர்த்தி விட்டு மடையை சீரமைக்காததால் தற்போது மடையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வீணாகி விட்டது. விளையும் பருவநிலையில் உள்ள நெல் பயிருக்கு மடையை தரமான முறையில் உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story