வேலைக்காரி உள்பட 2 பேர் கைது; 42 பவுன் நகைகள் மீட்பு

நாகர்கோவிலில், டாக்டர் வீட்டில் திருடிய வழக்கில் வீட்டு வேலைக்காரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு, 42 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், டாக்டர் வீட்டில் திருடிய வழக்கில் வீட்டு வேலைக்காரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு, 42 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
டாக்டர் வீட்டில் திருட்டு
நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரையை சேர்ந்தவர் ஆபிரகாம் ஜோயல்ஜேம்ஸ் (வயது 68), டாக்டர். இவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். இவர் ஆசாரிபள்ளம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், தனது வீட்டில் உள்ள லாக்கரின் சாவியை காணவில்லை. இந்த நிலையில் அதில் வைத்து இருந்த 42 பவுன் நகைகள், வைர நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை லாக்கரின் நம்பர் லாக்கை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் திருடி உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆபிரகாம் ஜோயல்ஜேம்சின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெளி நபா்கள் வீட்டுக்குள் வந்து சென்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஆபிரகாம் ஜோயல் ஜேம்ஸ் வீட்டில் பணியாற்றி வரும் வேலைக்காரர்கள் மற்றும் அவரது வீட்டுக்கு வந்து சென்ற நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில், டாக்டர் வீட்டில் வேலைக்காரியாக இருந்த நாகர்கோவில் பெருவிளை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயசுபா (37) மற்றும் கார் டிரைவர் பள்ளவிளை சர்ச் தெருவை சேர்ந்த இர்வின் (35) ஆகியோர் லாக்கரில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று ஜெயசுபா, இர்வின் ஆகியோரை கைது செய்தனர்.
42 பவுன் நகை மீட்பு
பின்னர் அவர்களிடம் இருந்த 42 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 வைர நகைகளை மீட்டனர். மேலும் அவர்கள் திருடிய பணத்தை பங்கிட்டு செலவு செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஜெயசுபா, இர்வின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story