மதுரை,
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மதுரையில் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினம்
டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் வாகன சோதனை, பாலங்கள் உள்ள பகுதியில் சோதனை, விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ரெயில் நிலையம்
மதுரை ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தண்டவாள பகுதிகளில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட ரெயில்வே பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்களிலும் சீருடை அணிந்த மற்றும் மப்டி உடையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதுபோல், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளிலும் சந்தேகத்திற்கு இடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
5 அடுக்கு பாதுகாப்பு
மதுரை விமான நிலையத்திலும் வழக்கத்தை விட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன், தமிழக போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பயணிகள் கொண்டு வரும் உடைமைகளும் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின்னரே விமானத்தில் அனுமதிக்கப்படுகிறது. விமான உள் வளாக பகுதிகளிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், விமான நிலைய வெளி பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.