இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Dec 2021 7:45 PM GMT (Updated: 2021-12-07T01:15:36+05:30)

இருதரப்பினர் மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரமங்கலம்:

தகராறு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள பெருமாள் தீயனூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 47). அதே பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ்(39). விவசாயிகளான இவர்கள் 2 பேருக்கும் இடையே மரத்தில் தழை வெட்டும்போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பாக்கியராஜின் நிலத்தின் அருேக ரத்தினசாமியின் ஆடுகள் மேய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது பாக்கியராஜ் தனது நிலத்தின் அருகே ஆடுகளை மேய்க்கக்கூடாது என்று ரத்தினசாமியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாக்கியராஜின் உறவினர்களான பழனிச்சாமி, இளஞ்சியம், அருமைநாயகம், ரத்தினசாமியின் உறவினர்களான சாந்தி, சக்திவேல், சதீஷ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
8 பேர் மீது வழக்கு
இதையடுத்து இருதரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த 8 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இருதரப்பினரும் விக்கிரமங்கலம் போலீசில் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story