பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சம் குட்கா பறிமுதல் என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது


பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சம் குட்கா பறிமுதல் என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2021 12:24 AM IST (Updated: 8 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்:-

பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகையிலை பொருட்கள் கடத்தல்

தமிழகத்தில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வெளிமாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டெய்னர் லாரியில்...

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் குட்கா கடத்தி வரப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து அவர் புகையிலை பொருட்கள் கடத்தி வருபவர்களை பிடிக்க தனிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தீவிர கண்காணிப்பு

அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி, கண்ணன், ஏட்டு இளையராஜா, போலீஸ்காரர் சுந்தர்ராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு கண்டெய்னர் லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து நேற்று காலை தஞ்சை புறநகர் பகுதியில் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

விசாரணை

தஞ்சை மேலவஸ்தாசாவடி பகுதியில் தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கண்டெய்னர் லாரியும், அதற்கு முன்பாக மினிலாரியும் சென்றது. சந்தேகத்தின்பேரில் அந்த 2 வாகனங்களையும் தனிப்படையினர் பின்தொடர்ந்து சென்றனர்.
நாஞ்சிக்கோட்டை பைபாஸ் சாலையில் இருந்து கொல்லாங்கரை செல்வதற்காக மினி லாரியும், கண்டெய்னர் லாரியும் திரும்பின. உடனே தனிப்படையினர் மினி லாரியையும், கண்டெய்னர் லாரியையும் வழிமறித்து அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

1,700 கிலோ குட்கா பறிமுதல்

போலீசாரின் விசாரணையில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படையினர், கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குட்கா மூட்டைகளை  தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 125 மூட்டைகளில் 1,700 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்த பயன்படுத்தியதாக கண்டெய்னர் லாரியையும், மினி லாரியையும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது

மேலும் இது தொடர்பாக தஞ்சையை அடுத்த கொல்லாங்கரையை சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜ்குமார்(வயது 28), தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த வேதையன் மகன் என்ஜினீயர் அசோக்ராஜ்(31), சேலத்தை சேர்ந்த பெரியசாமி மகனான கண்டெய்னர் லாரி டிரைவர் ஆனந்த்(24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கண்டெய்னர் லாரி, மினி லாரியையும் தஞ்சை தாலுகா போலீசிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர். 

டி.ஐ.ஜி.பாராட்டு

இந்த தகவலை அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நேரில் சென்று பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை பார்வையிட்டதுடன், 3 பேரை கைது செய்த தனிப்படையினரையும் பாராட்டினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.75 லட்சம் மதிப்பு

 தஞ்சை போலீஸ் சரகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, தனிப்படை போலீசார் கடந்த 15 நாட்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பெங்களூருவில் இருந்து தஞ்சைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான 1,700 கிலோ குட்கா, ரூ.40 லட்சம் மதிப்பிலான இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ளோம். மேலும் குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story