ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதிக்கு அஞ்சலி

தேனியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் முப்படை தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேனி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். இதையடுத்து தேனி மாவட்டத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.
தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேனியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் காசிபிரபு, கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தேனி நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் முதல்வர் பியூலா ராஜினி தலைமையில் ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியைகள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story