சேலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 1,70,673 வாக்காளர்கள்-ஆண்களை விட பெண்களே அதிகம்


சேலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 1,70,673 வாக்காளர்கள்-ஆண்களை விட பெண்களே அதிகம்
x
தினத்தந்தி 10 Dec 2021 4:01 AM IST (Updated: 10 Dec 2021 4:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் இருக்கிறார்கள்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் இருக்கிறார்கள்.
வாக்காளர் பட்டியல்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய 4 நகராட்சிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சிகளின் ஆணையாளர்களும், 31 பேரூராட்சிகளில் சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்களும் நேற்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்குச்சாவடிகள்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு 1.11.2021 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைந்த வாக்காளர் வரைவு பட்டியல்களை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நேற்று வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய 4 நகராட்சிகளில் 111 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், 83 ஆண்கள் வாக்குச்சாவடிகளும், 83 பெண்கள் வாக்குச்சாவடிகளும், 39 அனைத்து வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 205 வாக்குச்சாவடிகள் உள்ளன. 
4 நகராட்சிகள்
ஆத்தூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 24 ஆயிரத்து 438 பேரும், பெண் வாக்காளர்கள் 27 ஆயிரத்து 121 பேரும், இதரர் 5 பேரும் என மொத்தம் 51 ஆயிரத்து 564 வாக்காளர்கள் உள்ளனர். எடப்பாடி நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 24 ஆயிரத்து 438 பேரும், பெண் வாக்காளர்கள் 24 ஆயிரத்து 667 பேரும், இதரர் 8 பேரும் என மொத்தம் 49 ஆயிரத்து 13 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
மேட்டூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 23 ஆயிரத்து 298 பேரும், பெண் வாக்காளர்கள் 25 ஆயிரத்து 33 பேரும், இதரர் 2 பேரும் என மொத்தம் 48 ஆயிரத்து 333 வாக்காளர்களும், நரசிங்கபுரம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 423 பேரும், பெண் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 345 பேரும், இதரர் 2 பேரும் என மொத்தம் 21 ஆயிரத்து 770 வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 4 நகராட்சிகளையும் சேர்த்தால் ஆண் வாக்காளர்கள் 82 ஆயிரத்து 490 பேரும், பெண் வாக்காளர்கள் 88 ஆயிரத்து 166 பேரும், இதரர் 17 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 673 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
31 பேரூராட்சிகள்
இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள 31 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு 474 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில், 62 ஆண்கள் வாக்குச்சாவடிகளும், 62 பெண்கள் வாக்குச்சாவடிகளும் 413 அனைத்து வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 537 வாக்குச்சாவடிகள் உள்ளன.
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 89 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 98 ஆயிரத்து 790 பேரும், இதரர் 15 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 90 ஆயிரத்து 894 வாக்காளர்கள் உள்ளனர். சம்பந்தப்பட்ட நகர்ப்புற பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்களை வாக்காளர்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story