கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10 5 சதவீத உள் இடஒதுக்கீடு நிச்சயம் உறுதி செய்யப்படும் தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10 5 சதவீத உள் இடஒதுக்கீடு  நிச்சயம் உறுதி செய்யப்படும் தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 12 Dec 2021 1:19 AM IST (Updated: 12 Dec 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10 5 சதவீத உள் இட ஒதுக்கீடு நிச்சயம் உறுதி செய்யப்படும் என்று தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

தர்மபுரி:
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நிச்சயம் உறுதி செய்யப்படும் என்று தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
பொதுக்குழு கூட்டம்
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். 
முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், பாரிமோகன், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் இல.வேலுசாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் சரவணன், மாது, பசுமைத்தாயக மாநில துணைச் செயலாளர் க.மாது, சமூக ஊடக பேரவை மாநில செயலாளர் தயாளன், கிழக்கு மாவட்ட தலைவர் இமயவர்மன், கொள்கை விளக்க அணி மாநில துணைத்தலைவர் அரங்கராசு, வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
திண்ணை பிரசாரம்
தர்மபுரி நான் அதிகம் விரும்பும் மாவட்டம். இங்கு வெற்றியையும் தேடி தந்திருக்கிறீர்கள். தோல்வியையும் தேடி தந்து இருக்கிறீர்கள். உங்களிடம் ஏற்பட்ட சிறிய சுணக்கத்தால் தோல்வி ஏற்பட்டது. அந்த சுணக்கம் இனி இருக்கவே கூடாது. அன்புமணி இங்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டபோது சிறப்பாக வாக்கு கேட்டு திண்ணை பிரசாரம் செய்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைப்பு செய்து பணியாற்றினீர்கள். அதன்பின் வெற்றி நமக்கு கிடைக்கவில்லை.
திண்ணை பிரசாரம், சமூக ஊடகத்தை முறையாக பயன்படுத்துதல் ஆகிய இரண்டையும் நன்றாக செய்தால் நமக்கு வெற்றி நிச்சயம். இதை செய்ய வேண்டியது நானோ, தலைவர்களோ அல்ல. ஒன்றிய அளவில் இளைஞர்களையும், இளம்பெண்களையும் திரட்டி செயல்படுத்த வேண்டும். தமிழக மக்களின் மேம்பாட்டிற்கான சிறப்பான திட்டங்களை செய்ய பா.ம.க.வை தவிர வேறு கட்சி இல்லை.
நிச்சயம் கிடைக்கும்
42 ஆண்டுகால தொடர் போராட்டத்தால் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வாங்கி கொடுத்தேன். முந்தைய அரசு அதற்கான அரசாணையை பிறப்பித்தது. தற்போதைய அரசும் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் காரணமாக இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை பெற உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு இதயசுத்தியுடன் சிறப்பாக செய்து வருகிறது. அதற்கு பாராட்டுக்கள். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது எல்ேலாருக்கும் தெரிந்ததுதான். அந்த நிலை வராது என நினைக்கிறேன்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 31 சதவீத இடங்களுக்கு பொது போட்டி உள்ளது. இதில் குறைந்தது 5 சதவீதத்தை பெற வன்னியர் சமூக இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும். இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இட ஒதுக்கீடு கோரி 7 நாட்கள் நாம் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த துணை ராணுவத்தை அனுப்பினார்கள். இப்போது இளைஞர்கள் வீரம், விவேகம், செயல்திறன் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் ராணுவத்தையும் சந்திக்கும் ஆற்றல் நமக்கு உள்ளது.
பாராட்டுக்குரியது
தமிழகத்தில் உள்ள பிற சமுதாய மக்களுக்கு நாம் என்ன கெடுதல் செய்தோம்? என்னுடைய ஒவ்வொரு நாள் அறிக்கையிலும் வன்னியர் சமூகத்தினருக்கு மட்டுமா பேசுகிறேன்?. ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறேன். குற்றம், குறைகளை சொன்னால் அதை அரசு திருத்தி கொள்வது பாராட்டுக்குரியது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 உயிர்களை பறிகொடுத்து பல்வேறு சமூகத்தினரை அழைத்து பேசி தொடங்கப்பட்ட பா.ம.க.வில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்தான் பொதுச்செயலாளர். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்தான் பொருளாளர். 
10 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த நாம் 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். வன்னியர் சமூகத்தினர் 2 கோடி பேர் இருப்பதாக சொல்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள நாம் ஏன் மனு கொடுப்பவர்களாக தொடர்ந்து இருக்க வேண்டும்? மனு வாங்குபவர்களாக நாம் மாற வேண்டும் என்பதே நோக்கம். இது தண்ணீர் விட்டு வளர்த்த கட்சியல்ல. கண்ணீர் விட்டு வளர்த்த கட்சி. 
7 நாள் போராட்டம்
42 ஆண்டுகால போராட்டத்தில் மனு கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டோம். இது மகிழ்ச்சி அளிக்கவில்லை. அம்பேத்கர் கற்பி, ஒன்றுசேர், போராடு என்று கூறினார். அதைத்தான் நான் செய்தேன். 
இட ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தை ஸ்தம்பிக்க செய்த 7 நாள் போராட்டம் போல் மீண்டும் ஒரு போராட்டம் வந்து விடக்கூடாது என்பதற்காக கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகம் மூலம் என்னை அழைத்து பேசினார். 
அப்போது தமிழகத்திலுள்ள 202 பிற்படுத்தப்பட்ட சாதிகளை 6 தொகுப்பாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கலாம் என கூறினேன். அதை அமல்படுத்தி இருந்தால் நரிக்குறவர்கள் முதல் அனைத்து சமூகத்தினருக்கும் நியாயம் கிடைத்திருக்கும்.
80 தொகுதிகளில் வெற்றி
ஆனால் அப்போது அவருடன் இருந்த 2 பேரின் சூழ்ச்சி காரணமாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. நீண்டநாள் பசியோடு இருப்பவர்களுக்கு 20 சதவீதமும், ஓரிரு வேளை சாப்பிடுவோருக்கு 30 சதவீதமும் வழங்கப்பட்டது. 
நாம் போராடி வாங்கிக்கொடுத்த இந்த இட ஒதுக்கீட்டை 32 ஆண்டுகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனுபவித்தவர்கள் எப்போதாவது அதற்கு நன்றி தெரிவித்து இருப்பார்களா?. ஆனால் இப்போது 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட உடன் ஒன்று கூடி பேசி இதை தடுக்க கோர்ட்டுக்கு போகிறார்கள்.
நான் எப்போதும் நியாயத்தை தான் பேசுவேன். தமிழக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நினைக்கும் பா.ம.க.வில் எந்த பாகுபாடும் இல்லை. ஒரு தொகுதிக்கு 5 ஆயிரம் இளைஞர்களை திரட்டி அடுத்த 4 ஆண்டுகளில் தீவிரமாக உழைத்தால் நாம் 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெறமுடியும். அதன்மூலம் தமிழகத்தை நாம் ஆளும் நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். 

Next Story